செவ்வாய், 10 மார்ச், 2009

உரத்த சிந்தனைகள் 1 - போரும் மனித உரிமைகளும்



இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் மூன்றாண்டுகளாக நடந்துவரும் ஈழப்போரில் மக்களுக்குப் பல அடிப்படை உரிமைகள் இரு தரப்பினராலும் அடிக்கடி திட்டமிட்டு பறிக்கப் படுகின்றன. இவற்றில் முக்கியமாக எழுத்து மற்றும் பேச்சு சுதந்திரம், கலாச்சாரத் தனித்தன்மை, தங்கள் மொழி மற்றும் எண்ணங்களுக்கான அங்கீகாரம் எல்லாமே அடங்கும். விடுதலைப்புலிகள் தங்கள் இயக்கத்தை ராணு அடிப்படையில் இயக்குவதும் இலங்கை அரசு, போரின் கட்டாயங்களுக்காக சில ஜனநாயக உரிமைகளை ஏனோ தெரியவில்லை, போரும் மனித உரிமைகளும் ஒன்றை ஒன்று நன்கு புரிந்து வைத்திருந்தாலும், ஒத்துப் போவதில்லை. இதன் காரணத்தை அறிய ஆழ்ந்த சிந்தனை எதுவும் தேவையில்லை. போர் என்பதே தனி மனிதனின் அடிப்படை உரிமைகளான உயிருக்கும் உடமைகளுக்கும் எதிரியாக உபயோகப்படுத்தப் படும் உபகரணம்.

போர் புரியும் சிப்பாய் தனது பயிற்சிக் காலத்திலேயே ராணுவச்சட்டத்திற்குப் பணிந்து சில அடிப்படை உரிமைகளை ராணுவத் தலைமையிடம் ஒப்படைத்து விடுகிறார். அவருக்கு ஜனநாயக உரிமைகள் ஓரளவு ஒடுக்கப்படுகின்றன. முக்கியமாக தனது கருத்துக்களை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் பேச்சுரிமையை அவர் இழக்கிறார். அவர் தனது பயிற்சிக் காலத்தில் சுய சிந்தனைகளை ஓரம் கட்டிவிட்டு, ராணுவம் கட்டளையிட்டதை அப்படியே நிறைவேற்றவேண்டும் என்ற உணர்வை ஒரு கிளிப்பிள்ளையப் போல அவரைத் திரும்பத் திரும்பச் சொல்ல வைத்து அதைப் பசியையும் உறக்கத்தையும் போல உடலுடன் இரண்டறக் கலந்ததாக்கி விடுகிறது ராணுவம். ஏற்கனவே கிராமப்புறச் சூழலில் வளர்ந்த அவருக்கு சிறு வயது முதலாகவே பல அடிப்படை மனித உரிமைகளை ஜாதி அல்லது பொருளாதர அடிப்படையில் சமூகம் மறுத்திருக்கிறது. ஆகவே அவருக்கு ராணுவம் அவருடைய அடிப்படை மனித உரிமைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பெரிய இழப்பாகத் தோன்றுவதில்லை.

அப்படிப் பட்ட அவருக்கு பயிற்சிக் காலத்தில் தனது குறிக்கோளுக்காக எதிரியைக் கொல்ல வேண்டும், எதிரியின் உடமைகளை அழிக்கவேண்டும் என்ற ராணுவ சித்தாந்தம் போதிக்கப்படுகிறது. அதற்கான போர்த் திறமைகளை அவருக்கு கற்பிக்கிறார்கள். வலிமையே ராணுவ நாகரீகம், மென்மை பெண்களுக்கு அழகு ராணுவ வீரனுக்கு அல்ல என்று அவருடைய நண்பர்களும் சமூகமும் அவருக்குப் போதிக்கிறது. அதனால்தான் ராணுவக்காரன் என்றால் தடலடி செய்பவன் என சமூகம் தனக்குத்தானே கற்பித்துக் கொள்கிறது. அதையே சிப்பாயும் திடமாக நம்புகிறார். ஆகவே பொதுவாக அவர் சரியாக எதையும் செய்து முடிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோளை தனது வாழ்க்கையின் அடிப்படையாகக் கொள்கிறார். ஆகவே அவரது போர்க்காலச் செயல்களில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று குறை கூறுவோரை ராணுவமே பெரும்பாலும் நம்பத்தயராவதில்லை.

இத்தகைய மனப்போக்குக்கு ஒரு நல்ல உதாரணம் இலங்கை பாதுகாப்புத்துறை காரியதரிசியாகப் பணியாற்றும் முன்னாள் ராணுவ கேர்ணலாயிருந்த திரு கோடபாயா ராஜபக்சஅவர்களே. அவர் ராணுவத்தின் மனித உரிமை மீறல்களைப் பற்றிக் குறைகூறுவோரை எள்ளி நகையாடி, இவர்கள் எல்லோரும் நாட்டின் எதிரிகள், விடுதலைப் புலிகளுக்குத் துணை போகும் தேச விரோதிகள் என்ற பல முறை வர்ணித்திருக்கிறார். அத்தகைய மெத்தனமான போக்குக்கு முக்கியமான காரணம் அவருடைய ராணுவப் பின்னணியே என நம்புகிறேன். மேலும் அரசியல் மற்றும் அவருடைய பதவியும் மற்ற காரணங்களாயிருக்கலாம்.

விடுதலைப் புலிகளின் போக்கும் இந்த அடிப்படை மனப் பான்மையிலிருந்து மாறுபட்டதல்ல. தமிழ் ஈழத்தைப் பெற பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கே தெரியும் மற்றவர்கள் அதற்குப் பணிந்தே ஆகவேண்டும் என்று அவர்கள் திடமாக நம்புகிறார்கள். ஏதோ நமது உரிமைகளுக்காக இவர்களாவது போரிட முன்வருகிறார்களே என்று தனி ஈழ நாட்டில் திடமான ஆர்வம் காட்டுவோர் - அவர்களே சிங்கள ராணுவம் மனித உரிமைகளை மீறுகிறது என்று கூக்குறல் எழுப்பினாலும் - விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களைக் கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றனர். தமிழ் ஊடகங்களில் அத்தகைய செய்திகள் பெரும்பாலும் ஒதுக்கப்படுவதன் காரணமும் இத்தகைய மனப்போக்கே.

போர்க்காலத்தில் ராணுவத்தைப் பற்றிக் குறை கூறுவது ராணுவ வீரர்களின் மனதிடத்தைப் பாதிக்கும் என்பதில் ஓரளவு உண்மை இருக்கிறது. ராணுவ வீரன் போரில் தன் உயிரைப் பயணம் வைத்து போரில் ஈடுபடாத மக்களைக்காக்கிறான். அது அவனது அடிப்படைக் கடமையாகும். ஆகவே அத்தகைய குறிக்கோளோடு அவன் போரில் ஈடுபடும்போது கட்டாயம் போரில் சிலரின் உயிர்க்கொலைகளும் உடமை இழப்புக்களும் நிகழும் என்பது பொதுவாக மக்களுக்குத் தெரிந்த விஷயம். ஆகவே அவை நேரும்போது ஏன் சமூகம் கொந்தளிக்கிறது என்று அவனுக்கு விளங்குவதில்லை. அதனால் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசுவோரை எல்லாம் எதிரிக்குத் துணை போனவர்கள் என்ற எண்ணம் ராணுவத்தினரினிடையே பரவலாக உள்ளது.

மனித உரிமைகள் போரிலும் சரி, அமைதிக்காலத்திலும் சரி, கட்டாயம் மதிக்கப்பட வேண்டியவையாகும். அதுவே மனித நாகரீகத்துக்கும் ஜனநாயகத்துக்கும் அடிகல்லாகும். ஆகவே போராயிருந்தாலும் அதில் நாட்டுக்காகச் சேவைபுரியும் ராணுவ வீரனாயிருந்தாலும் அல்லது அப்போரை நடத்த வழிகாட்டும் அரசியல் தலைமயும் மனித உரிமைக்கு அதிக இழப்புக்கள் நேராதவாரு, ராணுவ வீரர்களுக்கு அதன் அடிப்படையை விளக்க வேண்டும். ஆனால் போர் வீர ர்களுக்கு அத்தகைய பேச்சுக்களில் நம்பிக்கை பிறக்கவேண்டுமென்றால் சமூகம் அதன் எல்லா அங்கங்களிலும் மனித உரிமையை மதிக்கும் கலாச்சாரத்தைக் கொண்டுவரப் பாடுபட வேண்டும். இல்லாவிட்டால் ராணுவத்திற்கு இதெல்லாம் ஏட்டுச்சுரைக்காய்தான் என்று தன்னிச்சையாகச் செயல்படும். அது பெரும் இழப்பாகும்.

மேலும் 'ஏரியா வெபன்' (அதாவது போரிடுவோரைக் குறியிடாமல் ஒரு பகுதியையே அழிக்கும்) என்று கூறப்படும் ஆயுதங்களையும் வெடிகுண்டுகளையும் உபயோகிப்பதை அரசு ஒரு கொள்கையாகக் கையாளவேண்டும். உதாரணமாக தீவிரவாத இயக்கங்கள் தன் நாட்டு மக்களிடையே ஒளிந்திருந்து தங்கள் தாக்குதலை நடத்துகின்றன. அத்தகைய சூழ்நிலையில் விமானத்திலிருந்து குண்டுமாறி பொழிவது அப்பாவி மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பேராபத்த்தை விளைவிக்கும். ஆகவேதான் இந்திய ராணுவம் உள்நாட்டுப் போர்களில் விமானப் படையைத் தாக்குதலுக்கு அதிகபட்சம் உபயோகிப்பதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக