வெள்ளி, 24 டிசம்பர், 2010

கடைசியாக, ஒரு தன்மானத் தமிழன்

தமிழ் நாட்டு அரசியல் அவலங்கள் எல்லோருக்கும் தெரிந்ததே. இருந்தாலும் கடைசியாக அந்த ‘இலவசத்தைக் கொடுத்து அரசயில் நடத்தும் கலாச்சாரத்தைத் தட்டிக்கேட்க கடைசியாக ஒரு தமிழனுக்காவது தன்னுணர்வு இருந்தது என்பதை நான் பின் வரும் செய்தி மூலம் உணர்ந்தேன். வளர்க விஜயகுமார்கள், அழிக இலவச லஞ்ச அரசியல் என்று வாழ்த்துகிறேன்.

தன்மானத் தமிழன் விவசாயி விஜயகுமார்


புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து
விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு
கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப்பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்துவிவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான
மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.

அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்.
முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும்,அன்பும் உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி
வைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.

“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் ஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.

இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவுஅடையச் செய்தாலே போதுமே.

கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.


அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519.அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை

ஞாயிறு, 28 நவம்பர், 2010

தயவு செய்து அவர்களை கேவலப்படுத்தாதீர்கள் – ஆதவன்

தயவு செய்து அவர்களை கேவலப்படுத்தாதீர்கள் – ஆதவன்

முன்னை நாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஆதவனின் விசேட செய்தி வன்னயிலிருந்து!

தயவு செய்து உங்கள் சூதாட்டத்தை நிறுத்துங்கள்.

தயவு செய்து மக்களை ஏமாற்றும் உங்கள் இழி செயலை நிறுத்துங்கள்.

மாவீரர் தின உரை நாடகத்தை முன்னிட்டு, முன்னைய கட்டுரையில் புலம்பெயர் சூழலில் மாவீரர் தினத்தை நினைவு கொள்ளுவதிலுள்ள போலித்தனங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம். மீண்டும் அது குறித்து மேலும் சில விடயங்களை எங்கள் புலம்பெயர் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றோம். சீனாவில் இப்படியொரு கருத்துண்டு – மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை – பெரும்பாலும் எங்களுடைய நிலைமையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். உங்களது செயல்கள் எங்களது மௌனத்தை கலைக்கிறது. நாங்கள் சாவை உதைத்துக் கொண்டு வாழ்வதற்கான போராட்டத்தில் இருக்கிறோம்.

தினமும் செய்திகளைப் படித்து, அது குறித்தெல்லாம் விவாதம் செய்யுமளவிற்கு, மனதிலும் உடலிலும் எங்களுக்கு தென்பில்லை நன்பகளே! ஆனாலும் இனியும் நாங்கள் மௌனமாக இருந்தால் நீங்கள் எங்கள் நிர்வாணம் மறைக்கும் கோவணங்களையும் விலைபேசத் தயங்கப் போவதில்லை ஏனெனில் உங்களது தேவையெல்லாம் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் மட்டுமே. எனவே இனியும் அமைதி காப்பது சரியல்ல என்பதை உணர்ந்தே இதனை பதிவு செய்ய விழைகின்றோம். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா!
சமீப நாட்களாக, நாங்கள் அவதானித்து வருகின்ற சில சம்பவங்களை முன்னிறுத்தி விவாதிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

எங்கள் மக்களும், எங்கள் சரணடைந்த போராளிகளும் அடுத்த வேளை உணவுக்காக கையேந்திக் கொண்டிருக்கும் போது, நீங்கள் புலம்பெயர் நாடுகளில், எங்கள் மரணமடைந்த போராளிகளை நினைவு கொள்வதாக அறிவிக்கின்றீர்கள். இறந்து கொண்டிக்கும் எங்கள் உறவுகளைக் காப்பாற்ற முடியாத உங்களது சுயநலத்தையும், சந்தர்ப்ப வாதத்தையும் எண்ணி ஆரம்பத்தில் மனம் நொந்திருந்தாலும், சரி எங்கள் உடன்பிறப்புக்கள் போல் வாழ்ந்த சகோதரர்களையும், சகோதரிகளையும்தானே நினைவு கொள்ளுகின்றீர்கள் என்று உள்ளுர மகிழ்ந்தோம். நாங்கள் பசியோடும் வேதனையோடும் இருந்த போதும் அவர்களது தியாகம் இப்படியாவது மக்களால் நினைவு கொள்ளப்படுகிறதே என்பதையெண்ணி மகிழ்சியடையாமல் இருக்க முடியவில்லை. ஆனால் அது கூட உண்மையல்ல உங்கள் பணம் சம்பாதிக்கும் பேராசையின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் என்பதை அறிந்த போது எங்களால் எப்படி அமைதியாக இருக்க முடியும். போராட்டம் நடந்து கொண்டிந்த காலத்திலும் அதன் வலிகளை எந்தவகையிலும் அனுபவித்தறியாத சிலர் புலம்பெயர் மக்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டை வியாபாரமாக்கினீர்கள். உங்களைப் போன்றவர்களின் கேவலமான செயற்பாடுகளை அறிந்திருந்த போதும், நாங்கள் எங்கள் மக்களுக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டோம். இன்று ஒரு மிகப்பெரிய அழிவை சந்தித்த பின்னர் போராட்டம் முற்றுப்பெற்று விட்டது. எங்கள் போராட்டம் ஓய்தாலும் உங்கள் பணம் சம்பாதிக்கு சூதாட்டம் மட்டும் இன்னும் ஓயவில்லை. போராட்ட காலத்தில் போராட்டத்தை விற்றீர்கள், இன்று அதில் இறந்தவர்களின் தியாகங்களை ஏலம் போட்டு விற்கிறீர்கள். இதனை மனச்சாட்சியுள்ள எந்த மனிதனால் சகித்துக் கொள்ள முடியும்? உங்களது ஊடக பலத்தாலும், அடியாள் பலத்தாலும் இந்த உண்மையை புலம்பெயர்ந்த சாதாரண மக்கள் அறியாத வண்ணம் நீங்கள் தடுத்து வைத்திருக்கலாம், ஆனாலும் தங்கள் மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் நல்ல மனிதர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த விடயங்களை பகிரங்கமாகப் பேசுகின்றோம். எங்களின் இந்தக் குரல்கள், நல்லுள்ளம் கொண்ட ஒரு சிலரையாவது உசுப்பும், செயலுக்கு தூண்டும்; என்பதில் இம்மியளவும் எங்களுக்கு சந்தேகமில்லை.

ஏதோ நடந்துவிட்டுப் போகட்டுமே என்று எங்களால் அமைதியாக இருக்க முடியாது. ஏனென்றால் உங்களது சூதாட்டத்தால் கேவலப்படுத்தப்படுவது எங்கள் சகபோராளிகளின் தியாகங்கள், பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது எங்கள் மக்கள். அவர்கள்தான் போராட்டத்தால் எல்லாவற்றையும் தொலைத்து உருக்குலைந்து போனவர்கள். ஒரு காலத்தில், விருந்தோம்பல் என்றால் வன்னி என்று சொன்ன காலம் போய் பசி,பட்டினி. நோய் என்றால் வன்னி என்று சொல்லும் நிலைமை உருவாகியிருக்கிறது. இப்படியொரு நிலைமையில், தொடர்ந்தும் எங்களைக் காட்சிப் பொருளாக்கி அரசியல் செய்யும் உங்கள் கேவலமான செயல்களை எங்களால் அனுமதிக்க முடியாது. எங்களால் மட்டுமல்ல, மனிச்சாட்சியுள்ள எந்தவொரு புலம்பெயர் தமிழரும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றே நாங்கள் நம்புகிறோம்.

இன்று பலகோடி ரூபாய் செலவில், மாவீரர் தினக் கொண்டாட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றீர்கள். கொண்டாடுவதற்கு இது மகிழ்சிக்குரிய விடயமா அல்லது திருவிழாக் கோலம் கொண்டு அனுஸ்டிப்பதற்கு இதென்ன கோயில் நிகழ்வா? பின்னர் எதற்கு இந்த ஆடம்பரங்கள்? யாருடைய நன்மைக்காக இது மேற்கொள்ளப்படுகிறது? எங்கள் தன்னலமற்று இறந்த, அந்த போராளிகள் மீது உங்களுக்கு உண்மையிலேயே ஈடுபாடிருந்தால், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அவர்களை நினைவு கொண்டிருக்க முடியும். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லை ஏன்? பதில் பணம் சம்பாதிக்க வழி இல்லாமல் போய்விடும் என்பதுதானே! உண்மையில் இதற்கும் மக்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டிற்கும் ஒரு தொடர்புமில்லை என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இவ்வாறான இழிவுகள் ஒருபுறம் என்றால், மறுபுறம் யார் யாரோ, இம்முறை மாவீரர் தின உரை ஆற்றவுள்ளதாக பிறிதொரு நகைச்சுவையான செய்தியும் வெளிவந்து கொண்டிருகிறது.

இதுவும் நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று எமது கடந்தகாலத்தை இழிவுபடுத்தும் செயல்தான். விடுதலைப்புலிகள் அமைப்பைப் பொருத்தவரையில் மாவீரர் தின உரையாற்றும் தகுதி அதன் தலைவருக்கு மட்டுமே உண்டு. அதுவே புலிகளின் மரபாகவும் இருந்து வந்திருக்கிறது. சிலரின் இந்த தான்தோன்றித்தனமான செயற்பாடானது, புலிகளின் மரபையும், அந்த மரபைக் காத்து உயிர்நீத்த ஆயிரக் கணக்கான போராளிகளின், உடன் இருந்த மக்களின் தியாகங்களை நகைச்சுவைக்குரியதாக மாற்றும் செயலன்றி வேறொன்றுமில்லை. தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியைச் பகிரங்கப்படுத்திய கே.பியை துரோகி என்றவர்கள் எந்த அடிப்படையில் இந்தச் செயலை அனுமதிக்கின்றனர்? அவ்வாறு உரையை ஏற்பதாயின் முதலில் கே.பியின் கூற்றை அங்கரித்துவிட்டல்லவா அதனை ஆமோதிக்க வேண்டும். சிலர் சொல்லுவது போன்றே தலைவர் இருக்கிறார், அவர் தக்க தருணத்தில் வருவார் என்றால் எவ்வாறு தலைவர் பிரபாகரனின் இடத்தை எடுத்துக் கொள்ள முடியும்? இப்படியான மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போகின்றவர்கள் யார்?

ஒருவகையில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான மாவீரர் தின நிகழ்வுகள் மேலும் உருத்திரகுமார் உரை நிகழ்த்தும் கதையெல்லாம், கோடாம்பாக்க தமிழ் சினிமாவின் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு ஒப்பானது. அங்கு இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் இருக்கும் உணர்வுகளை கிளறுவதன் மூலம் பணம் சேர்கிறது. இங்கு, எங்கள் மக்கள், போராளிகள் மீதும் அவர்களது தன்னலமற்ற அர்ப்பணிப்பு மீதும்
கொண்டிருக்கும் உள்ளார்ந்த உணர்வை ஆதாரமாகக் கொண்டு உங்கள் பணம் பெருகுகிறது. அந்த தன்னலமற்ற மனிதர்களை முதலீடாகக் கொண்டு உங்களது குடும்பங்கள் செல்வச் செழிப்பில் வளர்கிறது. இப்படியொரு அவலம் உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளில் எங்குமே கானக்கிடைக்காத ஒன்று. உலகில் பல தேசங்களில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் சிலதே வெற்றி பெற்றிருக்கின்றன. தோல்வியடைந்த இடங்களில் எங்கும் இது போன்றதொரு கேவலமான அநீதி போராடிய மக்களுக்கு, அந்த மக்களின் ஒரு பகுதியினரால் மேற்கொள்ளப்பட்டதில்லை. சொந்த உறவுகளையே அந்த மக்களின் ஒரு பகுதியினர் போராட்டத்தின் பேரால் ஏமாற்றி பிழைக்கும் அவலத்தை இங்குதான் நாம் காண்கிறோம்.

புலம்பெயர் உறவுகளே! போராட்டம் பற்றியும் அதன் முடிவு பற்றியும் பேசுவதற்கும் உரித்துடைவர்கள் ஈழத்திலேயே இருக்கின்றனர். எந்தவொரு முடிவும் ஈழத்தில் இருந்தே எடுக்கப்படும். அரசியல், அடையாளம் அனைத்தும் நாங்கள்தான். எனவே நீங்கள் அங்கு எடுக்கும் பிழையான உணர்ச்சி வேக முடிவுகள் எங்களையே பாதிக்கும் என்பதை உணர்ந்து செயற்படுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் எங்களைப் பாதிக்கும் போது அதில் தலையிடுவது எங்களைப் பொருத்தவரையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும் ஏனெனில் அது எங்களின் உயிர்வாழ்தலோடு சம்மந்தப்பட்டது. இன்று இன்னொரு கதையும் சிலர் சொல்ல முற்படுகின்றனர். ஈழத்தில் சிறையுண்டு கிடக்கும் போராளிகள் எல்லாம் அரசாங்கத்தின் முன் கையுயர்த்தியவர்கள், கோழைத்தனமாக சரணடைந்தவர்கள், அவர்களுக்கு போராட்டம் பற்றிக் கதைப்பதற்கு தகுதியில்லை என்றவாறும் சில அபிப்பிராயங்கள் உலவுகின்றன. அவ்வாறாயின் 17ஆம் திகதி சரணடைந்து பின்னர் ஏதோ ஊழல்களின் துணையில் தப்பியோடியவர்களை எந்தக் கணக்கில் சோப்பது. போராட்டத்தின் வலியையே உணராது இடைத்தரகர்களாக இருந்த வியாபாரிகள் தமிழ்த் தேசியம் பேசுவதை என்னவென்று சொல்வது. சமீபத்தில் உருத்திரகுமாரன் கொடுத்த நேர்காணல் ஒன்றில், களத்தில் இருக்க வேண்டியதில்லை ஒரு புரிந்துணர்வுடன் பணியாற்றினால் போதுமானது என்னும் தொனியில் பேசியிருந்தார். இதற்கு திலகர் முன்னர் களத்துடன் தொடர்பற்று வெளிநாட்டில் பணியாற்றியதையும் அதனை ‘மேதகு’ அங்கீகரித்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். முன்னர் தலைவர் பிரபாகரன், குறிப்பிட்டதொரு சூழலில் சொன்ன விடயத்தை தனது இன்றைய தான்தோறித்தனமான, சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளுக்கான நியாயமாகக் காட்டிக் கொள்ள முற்படுகின்றார் உருத்திரா. மேதகு சொன்னவற்றிற்கெல்லாம் கட்டுப்படுவது உண்மையாயின் அவர் இறுதியாக அமைப்பின் சர்வதேச பொறுப்புக்கள் அனைத்தையும் ஒப்படைத்தது கே.பியிடம் அல்லவா, அப்படியாயின் போராட்டம் அரசியல் அனைத்தையும் தீர்மானிக்கும் தகுதி கே.பிக்கு மட்டுமல்லவா உண்டு. இங்கு உரத்திரகுமாரனோ அல்லது புலம்பெயர் சூழலில் இரவு அரசியல் செய்யும் நபர்களோ, அனைவருமே ஈழத்து மக்களையும் போராட்டத்தின் மீதும் அதன் தலைமை மீதும் பற்றுக் கொண்டிருந்த புலம்பெயர் மக்களையும் ஏய்த்துப் பிழைக்கும் பித்தலாட்டமொன்றில் ஈடுபட்டிருப்பது தெளிவாகிறது.. உருத்திரா தன்னை நியாயப்படுத்துவதற்கு திலகரின் கடந்த காலத்தை புரட்டுகிறார். ஆனால் திலகரின் மனைவி, பிள்ளை இப்போதும் கிளிநொச்சியில் சாப்பிட வழியின்றி இருப்பதை மறந்துவிட்டார். நாம் மேலே குறிப்பிட்டது போன்று. ஈழத் தமிழர்கள் எதிர்காலத்துடன் தொடர்புபட்ட எந்தவொரு விடயத்தையும் களத்தில் நிலைகொண்டு இருப்பவர்களே எடுக்க முடியும். அதுதான் சரியானதும், பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புவதும். வெளிநாடுகளில் இருந்து கொண்டு எல்லாவற்றையும் செய்யலாம் என்றால் தீபன்,சொர்ணம், ஜெயம் இப்படியான தளபதிகள் எல்லாம் உயிரை மாய்த்திருக்கத் தேவையில்லையே! எல்லோரும் குளிருக்கான அங்கிகளைப் போட்டுக் கொண்டு அமெரிக்காவிலும், நோர்வேயிலும் இருந்து போராடியிருக்கலாமே. இத்தனை அழிவுகளையும் வேதனைகளையும் எங்கள் மக்களும் சந்தித்திருக்க வேண்டி வந்திருக்காதே.

தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், கேக்கிறவன் கேனயன் என்றால் எல்லாம் சொல்லலாம், அது மாதிரித்தான் இருக்கிறது உருத்திரகுமார்களின் கதை.

எனவே இனியாவது மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இவ்வாறான செயல்களை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களும் போராளிகளும் இது குறித்து தெளிவாகவே இருக்கின்றனர். இப்போது தெளிவடைய வேண்டிய பொறுப்பில் புலம்பெயர்
மக்கள்தான் இருக்கின்றனர். அவர்களின் அறியாமையை, உண்மையான ஈடுபாட்டை இவ்வாறான அரசியல் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள விழைகின்றனர்.

நாங்கள் உங்களைச் சிந்திக் கூடாது என்று கூறவில்லை. நாங்கள் உங்களை செயற்படக் கூடாது என்று கூறவும் இல்லை. ஆனால் உங்கள் செயற்பாடுகள் எங்களின் வாழ்வை மீட்டெடுக்கும் வகையில் அமைய வேண்டுமென்றே கூறுகின்றோம். அது வீழ்ந்து கிடக்கும் எங்களின் ஆயிரக்கணக்கான போராளிகளின் வாழ்வை புதுப்பிப்பிதாக அமைய வெண்டு மென்றே கூறகின்றோம். அங்கவீனமடைந்த, முகங்கள் சிதைந்த ஆண் பெண் போராளிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமென்றே கூறுகின்றோம். அவ்வாறில்லாது, மீண்டும் எங்களின் குருதி பார்த்து வசனம் சொல்லும் ஆசையை கைவிடுங்கள் என்றே சொல்லுகின்றோம். எங்கள் ஒப்பாரிச் சத்தம் கேட்க ஆசைப்படாதீர்கள் என்றே சொல்லுகின்றோம். எங்கள் பேச்சின் எல்லை இவ்வளவுதான். தயவு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள். எங்கள் களமாடி வீழ்ந்த பெண் போராளி கப்டன் வானதியின் கவிதை வரிகள் இவை – ‘எழுதாத என் கவிதையை எழுதுங்களேன். எல்லையில் என் துப்பாக்கி எழுந்து நிற்பதால், எழுந்துவர என்னால் முடியவில்லை’ – எங்களாலும் எழுந்து வர இயலவில்லை உறவுகளே! மழைக் காலம் என்பதால், எங்கள் பிள்ளைகளுடன் ஓதுங்கிக் கொள்வதற்கு ஒரு கூடு தேடிக் கொண்டிருக்கிறோம், பசி தரும் வலியுடன். எங்களை இந்த துயரத்திலிருந்து மீட்க வாருங்கள். தத்தளித்துக் கொண்டிருக்கும் எங்கள் தலைமுறை கரைசேர உதவுங்கள். முடியாவிட்டால் சில ஆறுதல் வார்த்தைகளையாவது சொல்லுங்கள். இனியும் இழப்பதற்கு எங்களிடம் குருதியில்லை.

இங்கு பசியில் அழும் குழந்தைக்கு ஒரு நேர பால் வாங்கி தரவிரும்பாத நீங்கள்- பட்டினியில் மயங்கும் முதியோருக்கு ஒரு நேர கஞ்சி ஊற்ற விரும்பாத நிங்கள் தேசியம்! சுயநிர்ணயம்! சுயாட்சி! என்றெல்லாம் கூறி எங்களை உங்கள் நலனுக்கான பகடைக் காய்களாக்க முயற்சிக்காதீர்கள்.

வீழந்து கிடக்கும் எமக்கு உதவ விரும்பாத நீங்கள், உதவ முன்வருபவர்களையும் மிரட்டி துரோகி பட்டம் சூட்டி அடாவடித்தனம் செய்யும் நீங்கள் எங்களது அரசியல் உரிமையில் மட்டும் அக்கறை காட்டுவதனை எப்படி நம்புவது?

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவதாகச் சொல்வதை எந்த அடிப்படையில் நம்புவது?

http://www.youtube.com/watch?v=jDH_U5uZLMA&feature=player_embedded

வெள்ளி, 2 ஜூலை, 2010

ஈழப்பிரச்சினைக்கு தீர்வு:

ஈழப்பிரச்சினைக்கு தீர்வு: களத்திலும் புலத்திலும் ஒருமித்த அரசியல் பாதையூடாக செயலூக்கம் பெறவேண்டும்: ஈழநேசனுக்கு கேணல் ஹரிஹரன் செவ்வி!!
"ஈழத்தமிழர்களின் உரிமைப் பிரச்சினையை இலங்கையிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அரசியல் பாதையில் முன்வைக்க வேண்டும். அதற்கு ஒருங்கிணைந்த செயல்பாட்டில் ஈழத்தமிழர்கள் பங்குபெற வழி செய்ய வேண்டும். நடைமுறையில் இயங்கக்கூடிய அடிப்படை செயல்பாட்டை. உருவாக்கி அதை ஒரு குரலுடன் எடுத்து முன்வைக்க தமிழ் தலைவர்கள் தயாராகவேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் கடந்த காலத்தில் தாங்கள் நடந்து கொண்ட வழிமுறைகளை மனக்கண்ணாடியில் பார்த்து புதிய செயலாக்கங்களை உருவாக்க வேண்டும். பழையன கழித்துப் புதியன புகுத்தும் நேரம் வந்துவிட்டது."


இவ்வாறு இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி கேணல் ஆர். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

"ஈழநேசன் நியூஸ்" இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் வழங்கிய நீண்ட செவ்வி வருமாறு:-

1) சிறிலங்காவின் போர் முடிவுற்று ஒரு வருடமாகியுள்ளநிலையில் மாநகரசபை தேர்தல், ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை தாண்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனமளிக்கும் உண்மையான அரசியல் மாற்றம் இடம்பெற்றுள்ளதா? ஆம். எனின் அதனை சற்று விளக்குவீர்களா?

இதற்கு என்னால் ஆம் அல்லது இல்லை என விடையளிக்க முடியாது. இதை சற்று ஆய்ந்து பார்க்க வேண்டும்.

இலங்கை அரசு ராஜபக்ச தலைமையில் தற்போது தேர்தல் வெற்றிகளுக்குப் பின் வலிமையாய் அமைந்துள்ளது. ஆனால் அதே சமயத்தில் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளும் அவர்களைச் சார்ந்த புலம் பெயர்ந்த மக்களும் இயக்கத்துக்கு ஏற்பட்ட அழிப்பின் பிறகு மனங்குன்றி தளர்ச்சியடைந்துள்ளனர். அவர்களிடையே உட்பூசல் இன்னும் ஓய்ந்த பாடில்லை.

அதுபோலவே புலம் பெயர்ந்த தமிழர்களும் நவக்கிரக நாயகர்களாக எட்டு திக்கையும் நோக்கி நின்று செயல் படுகின்றனர். இலங்கைத் தமிழ் அரசியல் வாதிகள் ராஜபக்சவின் ராஜதந்திர பகடைக் காய்களாய் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களிடையே ஒருங்கிணைந்த குறிக்கோளோ செயல்பாடோ எப்போதுமே தோன்றாமல் போகலாம். ஆக ஒட்டு மொத்தமாகத் இலங்கைத் தமிழ் மக்கள் அரசியல் செல்வாக்கை இழுந்து நிற்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் ராஜபக்சவுக்கு தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக அரசியல் கோரிக்கைகளை உடனடியாக செயல்பாடாக்க உந்துதல் எதுவும் இல்லை. இருந்தாலும் சர்வதேசச் சூழ்நிலை மற்றும் இந்தியாவின் நேர்முகமான தமது அழுத்தங்களை அதிகரித்தால் அவருடைய செயல் பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும். அப்படி இருந்தாலும் ராஜபக்ச அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப சிறிது சிறிதாகத்தான் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளைத் தனக்குச் சாதகமான நிலைபாட்டில் செயல்படுத்துவார் என்பது என் கணிப்பு.

2) சிறிலங்காவில் நடைபெற்று முடிந்த போர் உண்மையிலேயே எதிர்பார்த்த பெற்பேற்றை சர்வதேச சமூகத்துக்கு தந்துள்ளதா?

சர்வதேச சமூகத்துக்கு இலங்கைப் போரைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்புக்கள் இருந்ததாகத் தெரியவில்லை. அல் கயிதா அமெரிக்காவில் தொடுத்த தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பின் உலகச் சூழ்நிலையில் பொதுவாக எந்த தனிப்பட்ட விடுதலை இயக்கமும் தீவிர அல்லது பயங்கர வாத அணுகுமுறைகளை பாவிக்க பெரும்பாலான நாடுகள் அனுமதிக்கத் தயாராக இல்லை.

(இதற்கு மாறாக சோவியத்யூனியனுடன் அமெரிக்கா நடத்திய பனிப்போர் சூழ்நிலை விடுதலை இயக்கங்களுக்கு சாதகமாக இருந்தது என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அந்த உலகச் சூழ் நிலை மீண்டும் தோன்றாது.)

ஆகவே உலக நாடுகள் விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும் பொதுவாக பயங்கரவாதக் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்கள். பார்த்தும் வருகிறார்கள். நோர்வே போன்ற நாடுகள் ஓரளவு நடுநிலைப் பார்வையோடு செயல்பட்டாலும் அவர்களும் தற்போது ஒதுங்கியே நிற்கிறார்கள். ஆகவே அமெரிக்கத் தலைமையிலான பயங்கரவாதத்தை எதிர்த்த போர் ஆப்கானிஸ்தானில் முடிந்தாலும் அத்தகைய சூழ்நிலை மாறும் என்று எனக்குத் தோன்றவில்லை.

ஆனால் அதே நேரத்தில் உலகளவில் மனித நேய மேம்பாட்டுக்கும் மனிதர்களின் அடிப்படை உரிமைகளை முன்வைத்து நடக்கும் அரசியல் அல்லது மக்களின் போராட்டங்களுக்கு உதவ முன்பைவிட பலமான சக்திகள் உருவாகி வருகின்றன. இவை அத்தகைய போராட்டங்களுக்கு சர்வதேச அளவில் பல்வேறு வழிகளில் உதவக்கூடும்.

3) சிறிலங்காவின் போர் இடம்பெற்ற முறை குறித்து உங்கள் விமர்சனம் என்ன?

நான் ஒரு ராணுவ ஆய்வாளன் என்ற முறையிலேயே என் கருத்துக்களை முன் வைக்க விரும்பிகிறேன்.

விடுதலைப் புலிகள் கடந்த முப்பதாண்டுக் காலத்தில் நான்கு ஈழப் போர்களை நடத்தினார்கள். ஆனால் சென்ற ஆண்டு முடிந்த கடைசி ஈழப்போர் முன்பு நிகழ்ந்த ஈழப்போர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இம்முறை விடுதலைப் புலிகள் தங்களுடைய அடிப்படைப் பலமான கெரில்லா (கொரில்லா என்பது மனிதக் குரங்கு) போர் தந்திரங்களைக் குறைத்து சீருடையணிந்த வழமையான போர்ப்படைகளையும் முறைகளையும் நம்பியிருந்தனர். இது போர் சித்தாந்தங்களின் அடிப்படையில் ஒரு பெரிய தவறு. அவர்கள் தோல்விக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன;

1. கிழக்கு மாகாணத்தில் கருணாவின் பிரிவுக்குப்பின் புலிகளின் படைக்குத் தேவையான ஆள் சேர்ப்பு கடினமாயிற்று. ஆகவே இலங்கைப் படைகளை எதிர்க்க அடிப்படையான படைபலம் போதாமல் போயிற்று.

2. இலங்கை ராணுவம் ஜெனரல் பொன்சேகா தலைமையில் தனது பழைய செயல் முறைகளில் இருந்த தவறுகளைத் திருத்த முழு முயற்சிகளை மேற்கொண்டது. அதன் விளைவாக படை பலத்தை அதிகரித்து போரின் உக்கிரத்தை அதிகரிக்க உதவும் பீரங்கி மற்றும் ராக்கெட் படைகளையும் தீவிரப்படுத்தியது. ராணுவத்துடன் ஒருங்கிணைந்து செயல் படும் முறைகளை விமான மற்றும் கடற்படைகள் சீராக்கின.

3. பிராபகரன் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்பு குலைந்த இந்தியாவுடனான உறவை சீர்படுத்த முயலவில்லை. அவர் இந்தியாவில் இருந்த சில தமிழ் அரசியல்வாதிகளின் செல்வாக்கை ஓரளவு நம்பியிருந்திருக்கலாம்.

4. உலகளவில் 32 நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தன. ஆகவே புலம் பெயர்ந்த தமிழர்களிடையே விடுதலைப் புலிகள் அமைத்த பலம் வாய்ந்த உதவித்தளங்கள் முழுமையாக இயங்க முடியாமல் செய்யப்பட்டன.

ஆகவே முன்பை விட விடுதலைப் புலிகளின் தங்கள் கடைசிப் போரைப் பல பெருத்த இன்னல்களுக்கிடையே நடத்தினார்கள். அதே நேரத்தில் ராஜபக்ச விடுதலைப்புலிகளின் அழிப்பையே முதற் குறிக்கோளாக நாட்டுக்கு வைத்துப் போர் தொடுத்தார். அதற்கான அரசியல் மற்றும் அரசாங்க செயல்பாட்டுகளை ஒருங்கிணைந்து செயல்படுத்தினார். ஆகவே போரின் முடிவு ராணுவ செயல் பாடுகளின் படி ஓரளவு வியப்பளிக்கவில்லை. ஆனால் சாதாரண மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்புக்கள்தான் வியப்பும் விசனமும் அளித்தன.

4) சிறிலங்காவில் இடம்பெற்றபோரின்போது, இந்தியாவின் பங்களிப்பு உங்களுக்கு தெரிந்தவரையில் என்ன?

இந்தியா நேரடி ராணுவ உதவியைத் தவிர்த்தது. அது அளித்த சில ஆயுதங்களோ அல்லது போர் உபகரணங்களோ போரில் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் மறைமுகமாகப் பல்வேறு விதங்களில் இலங்கைக்குப் போரின்போது இந்தியா உதவியது.
(புலிகளின் பிரசாரத்துக்கு மாறாக இந்தியா முக்கியமான யுத்த தளவாடங்களை அளிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் சீனா அளித்த உதவியாகும். சீன ஆயுதங்கள் ஏற்கனவே இலங்கை ராணுவத்தில் இயங்கி வருபவை.)
இந்தியா அளித்த உதவிகளில் முக்கியமான சில, விடுதலைப் புலிகளின் பன்னாட்டு யுத்த தளவாட பரிவர்த்தனைகளைப் பற்றிய உளவை இலங்கையுடன் பகிர்ந்து கொண்டது,

தமிழ் நாட்டில் போர் நடந்த காலத்தில் அரசியல் முடிவுகளை தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடன் செயல்பாட்டில் கொண்டுவந்து தமிழ் நாட்டிலிருந்து விடுதலைப் புலிகளின் தேவைகளைப் போகாமல் தவிர்த்தது,

மேலும் சர்வதேச அளவில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசாமல் இருந்தது.(இதற்கு இலங்கையைவிட கொள்கையளவில் இந்தியா அந்த விவகாரத்தில் எந்த நாட்டிலும் பன்னாட்டுத் தலையீடு கூடாது என்று நம்புவதே காரணம்.)
போரின்போது ஜெனிவாவில் இலங்கையின் பிரதிநிதியாக செயல்பட்ட டாக்டர் டயான் ஜெயதிலக இந்தியா தனது உலகளவில் உள்ள செல்வாக்கை இலங்கைக்கு ஆதரவு திரட்ட மறைமுகமாச் செயல்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இது உண்மை என நான் நம்புகிறேன்.

5) சிறிலங்காவுக்கு எதிரான போர்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உங்களது கருத்து என்ன? சிறிலங்காவின் போர்க்குற்றம் குறித்த சர்வதேசத்தின் நிலைப்பாடு எதிர்காலத்தில் என்ன வகையாக அமையும்? அதில் இந்தியாவின் வகிபாகம் எதுவாக இருக்கும்?

போரின் அடிப்படை முறைகளில் மனித உரிமை மீறல்கள் தவிர்க்க முடியாதவை. ஆகவே. அதன் தாக்கத்தைக் குறைக்கவே சர்வதேச அளவில் ஏறக்குறையே எழுபது ஆண்டுகளாக சில கட்டுப்பாடுகளை எல்லா ராணுவங்களும் போரின் போது கடைப்பிடித்து வருகின்றன. இலங்கையும் அத்தகைய ஒப்பந்தங்களுக்குக் கைச்சாத்திட்டுள்ளது.

ஆகவே இலங்கை போர் குற்றச்சாட்டுகளைக் கண்டிப்பாக விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். இன்றைய உலகச் சூழ்நிலையில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் இதே குற்றச்சாட்டுகளை விசாரணை நடத்தி ஆக்கப் பூர்வமான முன்னேற்றங்களைத் தங்கள் செயல்பாட்டில் முறைப்படுத்தி வருகிறார்கள். இந்திய ராணுவமும் தற்போது போரின்போது மனித ராணுவ மீறல்களைத் தவிர்க்க வெளிப்படையான செயல்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.

மேலும் இலங்கை போரின்போது தொடர்ந்து மனித உரிமை மீறல்களைப் பற்றிய குற்றம் குறைபாடுகளை சீர் செய்ய அரசு எடுத்த செயல்பாடுகள் பொது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே போஸ்னியா, குரவேசியா, சூடான், ருவாண்டா, செர்பியா, சியர்ரா லியோன், மற்றும் லைபீரியா நாடுகளில் பிடிபட்ட போர் குற்றவாளிகள் சர்வதேச விசாரணைக்குக் கொண்டு வர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலை உண்டாவதைத் தவிர்க்காமல் இலங்கை அரசு மெத்தனம் காட்டுவது அரசியல் விவேகமோ அல்லது புத்திசாலித்தனமோ அல்ல.

இந்தியா இந்த விஷயத்தில் அதிகம் ஈடுபாடு காட்டாது. அதன் காரணங்கள் இந்திய இலங்கை உறவுக்கு அப்பாற்பட்ட கொள்கை அளவிலான முடிவுகளேயாகும். இதே காரணங்கள்தான் சீனா மற்றும் ரஷ்யா நாடுகளும் ஈடுபாடுகாட்டாமல் தவிர்க்கின்றன.

6) எல்லோராலும் பேசப்படும் சிறிலங்கா - சீனா - இந்தியா உறவுகள், அதன் எதிர்காலம் என்ன?

சீனா உலகளவில் தனது வலிமையை வணிக மற்றும் பொருளாதார ரீதியில் அதிகரித்து வருகிறது. அதற்கு ஆதரவாக உலகின் பல் வேறு கண்டங்களில் தனது செல்வாக்கைப் பரப்பி வருகிறது. அது போலவே வருங்காலத்தில் தெற்காசியாவிலும் மேலும் மேலும் தனது செல்வாக்கைப் பெருக்கும்.. ஏற்கனவே இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வணிக உறவை ஏற்படுத்துக் கொண்டுள்ளது சீனா. ஆகவே இலங்கை சீனா உறவும் அதிகரிக்கம். அதைத் தவிர்க்க முடியாது. இது இந்தியாவுக்கும் தெரியும்.

வணிகச் செல்வாக்கு பெருகப் பெருக சீனா தனது ராணுவ வலிமையையும் பெருக்கி வருகிறது. முக்கியமாக சீன கடற்படை அடுத்த பத்தாண்டுகளில் இந்தியப் பெருங்கடலில் பலம் வாய்ந்ததாகத் திகழும். இதுதான் இந்தியாவின் கவலையை அதிகரிக்கும் விஷயமாகும். ஏற்கனவே இந்தியப் பெருங்கடலில் இந்திய கடற்படை வலிமையான ஒரு கோளாக இயங்கி வருகிறது. ஆகவே இந்தியாவின் அண்மையில் சீனக்கடற் படையின் தோற்றம் இரு நாடுகளுக்கும் விரிசல் ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலையை அதிகரிக்கும்.

இந்தியாவும் சீனாவும் நேரடியான மோதலைத் தவிர்க்க விரும்புகிறார்கள்.. ஆகவே இந்தியாவும் சீனாவும் தங்களது உறவை சுமுகமாக்க முயற்சிகள் எடுத்துள்ளன. அதே நேரத்தில் இந்தியா தனது அண்மையான நாடுகளில் உறவுகளை வலுப்படுத்தி வருகின்றது. தெற்காசியத் துணைக்கண்டத்தில் சீனாவை எதிர் கொள்ளக்கூடிய திறன் வாய்ந்த ஒரே நாடு இந்தியா. ஆகவே அமெரிக்கா இந்தியாவுடனான உறவை தனது நெடுங்காலப் பார்வையுடன் வலுவடைய முயற்சி எடுத்துள்ளது.

சீனாவுக்கு அந்த வளர்ந்து வரும் உறவு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இந்தியாவின் அண்டை நாடுகளில் தனது உறவுகளைக் கடந்த பல ஆண்டுகளாக சீனா வலுவாக்கி வருகிறது. இவற்றில் பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை முக்கியமானவை.

இந்திய இலங்கை உறவு பல பரிணாமங்களில் தற்போது மிகவும் வலுவடைந்துள்ளது. இதற்கு இரு நாடுகளுக்கும் இடையேயான வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி முக்கிய காரணமாகும். ராஜபக்ச இந்தியாவில் சீனாவைப் பற்றி நிலவிவரும் அச்சத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திவருகிறார் என்றே தோன்றுகிறது. சீனாவுடனான அந்த உறவு எவ்வளவுதான் வளர்ந்தாலும் இலங்கை இந்தியாவின் மிக்க அண்மையில் உள்ள நாடானதால் இந்தியாவின் நிகழ்வுகளால் அதற்கு ஏற்படும் பாதிப்பு எப்போதுமே தவிர்க்க முடியாததாகும்.. ஆகவே சீன - இலங்கை உறவு, இந்திய - இலங்கை உறவைவிட மாறுபட்டது. இந்த இரு உறவுகளும் வெவ்வேறு அடிப்படை மட்டங்களில் வளரும் என்பது என் அனுமானம்.

7) சிறிலங்காவில் போர் இடம்பெற்றபோது தமிழக அரசியல் ஈழத்தமிழரை கைவிட்டு விட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து உங்களது விமர்சனம் என்ன?

தமிழக அரசியல் ஈழத்தமிழர்களைக் கைவிட்டு இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கு அரசியல் கலாச்சார சீரழிவும் ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பிறகு ஈழப் போராளிகள் தமிழ் நாட்டில் கொச்சைப் படுத்தப் பட்டதுமே முக்கிய காரணங்கள்.

காமராஜர் பெரியார் அண்ணா காலத்து அரசியிலைத் துறந்து வளர்ந்து வரும் தமிழக அரசியல் காலாச்சாரத்தை ஈழத்தமிழர்கள் புரிந்து கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏமாற்றத்துக்கு இதுவே முக்கிய காரணமாகும். மேலும் ராஜீவ் கொலையால் தமிழ் நாட்டில் ஏற்பட்ட தாக்கத்தை அவர்கள் சரியாக எடை போடவில்லை என்று தோன்றுகிறது. அந்தக் கொலைக்குப் பிறகு ஈழப்போரை ஆதரித்துப் பேச தமிழ் நாட்டின் முதன்மைக் கட்சிகள் முன்வராதது எதைக் காட்டுகிறது?

தமிழ் நாட்டு அரசியல் தேர்தல் அரசியலின் உந்துதலுக்குப் பணம் சேர்க்கும் யந்திரமாக இயங்குகிறது. தேர்வுக்கு வாக்கு சேகரிக்கும் உத்திகளுக்கே அரசியலில் முன்னிடமுண்டு. தேர்தல்கள் வியாபாரச் சாவடிகளாக மாறியுள்ளன. அத்தகைய உத்திகளின் பட்டியலில் ஈழப்பிரச்சினை அடிமட்டத்தில் தள்ளப் பட்டுள்ளது. ஆகவே முதன்மைக் கட்சிகள் ஈழப் பிரச்சினையை கறிவேப்பிலைப போல் தங்கள் ஆதாயத்துக்கு உபயோகிக்கிறார்கள். அவர்கள் அனுதாபம் காட்டுவது கூட அதே குறுகிய நோக்கத்தோடுதான்.

ஆகவேதான் அமைதிப் பேச்சு தொடர்ந்த காலகட்டத்தில் அது வெற்றி அடையவேண்டும் மக்களுக்கு அமைதி தொடற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஒருவர்கூட எத்தகைய முயற்சியையும் எடுக்கவில்லை.

ஆகவே ஈழத்து மக்களே தமிழ் நாட்டுத் தலைவர்களை முழுமையாக நம்பக்கூடாது என்றே நான் கூறுவேன். எனது பார்வையில் தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஒட்டு மொத்தமாகத் தெற்காசியாவிலேயே அரசியல்வாதிகள் பாரதி சொன்னது போல் வாய் சொல்லில் வீரம் காட்டுவார்கள். அவ்வளவுதான். அவர்களிடம் ஆக்கப் பூர்வமான செயல்பாடுகளை அதிகம் எதிர்பார்க்காதீர்கள்; அவர்கள் அழகான வார்த்தை ஜாலங்களில் மயங்காதீர்கள் என்று நான் சொன்னால் உங்களுக்குப் பிடிக்காது. ஆனால் அதுதான் யதார்த்தம்.

8) ஈழத்தமிழர் உரிமைப்போராட்டத்தின் இன்றைய நிலை உங்களை பொறுத்தவரை என்ன? சிறிலங்கா அரசு கூறுவதைப்போன்று எல்லோரும் இலங்கையர்கள் என்ற கோட்பாட்டுடன் எதி்காலம் சாத்தியப்படுமா?


இதற்கு விடையாக எங்கே நடக்கிறது போராட்டம் என்றே கேட்கத்தோன்றுகிறது. ஆக்கப் பூர்வமாய், அல்லல் படும் மக்களின் முதல் தேவை அவர்கள் வாழ்க்கை உடனடியாக சீராக வேண்டும். அன்றாடம் காய்ச்சிகளாக வீடின்றி வேலையின்றி இருப்பவர்களுக்கு முதலில் வாழ வழி செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் உரிமையைப் பற்றிப் பேசினால் அவர்களுக்கு நமது பேச்சில் ஈடுபாடு ஏற்படும். இதைச் சில தலைவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். ஆனால் நடைமுறையில் பல குறைபாடுகள் உள்ளன. இதற்கு உரிமைப் பிரச்சினைகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று பொருளல்ல.

போர் முடிந்த பிறகு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. வீரம் மட்டும் போதாது, விவேகம் வேண்டும். தற்போதைய தேவை அரசியல் விவேகமே. தமிழர் உரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க தற்போது போராட்ட முறை எவ்வாறு வெற்றிகாணும் என்பது எனக்கு விளங்கவில்லை.

நான் அரசியல் விமரிசகன் அல்ல. இருந்தாலும் தற்போது உரிமைப் பிரச்சினையை இலங்கையிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அரசியல் பாதையில் முன்வைக்க வேண்டும். அதற்கு ஒருங்கிணைந்த செயல்பாட்டில் ஈழத்தமிழர்கள் பங்குபெற வழி செய்ய வேண்டும். நடைமுறையில் இயங்கக்கூடிய அடிப்படை செயல்பாட்டை. உருவாக்கி அதை ஒரு குரலுடன் எடுத்து முன்வைக்க தமிழ் தலைவர்கள் தயாரா. இல்லை என்று விசனத்துடன் கூற வேண்டியிருக்கிறது.

9) புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் ஈழத்தமிழர் வாழ்வுரிமை குறித்து முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளின் ஆரோக்கியத்தன்மை குறித்த உங்களது கருத்து என்ன?

ஆரோக்கியம் குன்றிய நிலையிலே உள்ளது என்றே தோன்றுகிறது. முதலில் புலம்பெயர்ந்த தமிழர்கள் கடந்த காலத்தில் தாங்கள் நடந்து கொண்ட வழிமுறைகளை மனக்கண்ணாடியில் பார்த்து புதிய செயலாக்கங்களை உருவாக்க வேண்டும். பழையன கழித்துப் புதியன புகுத்தும் நேரம் வந்து விட்டது.

சென்னைத் தமிழில் சொன்னால் கட்டைப் பஞ்சாயத்து அணுகுமுறை கைவிடப்படவேண்டும். ஆரோக்கியமான .ஜனநாயகமுறையைப் பின்பற்ற வேண்டும். நல்ல முயற்சிகளை சிலர் எடுத்து வருகிறார்கள் அது வரவேற்கத் தக்கது. அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

மாற்றுக் கருத்துக்களை கூறுபவர்களை துரோகி என்றும் விபீடணன் என்றும் வர்ணிப்பதில் காழ்ப்புணர்ச்சியே அதிகரிக்கும்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யும் முயற்சிகளை இலங்கையில் வாழும் தமிழர்கள் எவ்வாறு எதிர் கொள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். புலம்பெயர்ந்த தமிழர்களின் செயல்பாட்டின் விளைவுகளை அவர்களே அனுபவிக்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்கு இந்தியாவையும் தமிழ்நாட்டுத் தலைவர்களையும் சாடுகிறார்கள். விமரிசனம் வரவேற்கத்தக்கதே. ஆனால் வரைமுறை இல்லாமல் சாடுவது பயனற்றது. அதனால் இந்தியாவில் தமிழர் பிரச்சினைகளில் உண்மையான அனுதாபதத்துடன் உள்ளவர்கள் எடுக்கும் முயற்சிகளை எவ்வாறு பாதிக்கும் என்று அப்படிச் சாடுபவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஒரே ஒரு வாக்கியத்தில் சொன்னால் வெற்றுப் பேச்சு போதாது, பயனுள்ள செயல்பாடுகளே தேவை.
URL:URL:http://www.eelanationnews.com/component/content/article/110-india/2232-hariharans-interview.html
Tuesday, 29 June 2010