தமிழ் நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

குழந்தை விதவைகள்



கேர்ணல் ஆர் ஹரிஹரன்

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் வங்காளத்தில் ராணுவப் பணியில் ஈடுபட்டிருந்தேன். நாங்கள் தங்கியருந்த இடம் கிராமப் புறத்தில் இருந்தது. ஒவ்வொரு மாலையும் சூரியன் மறையும் நேரத்தில் கோவில்  மணிகள் கேட்கும். ஆனால் அதற்கு முன்னால் கோவிலில் இருந்து பெண்கள் அழும் ஓலம் கேட்கும். ஒரு நாள் நான் அங்கு போய் பார்த்த போது, வெள்ளைச் சேலை கட்டிக் கொண்டு இரண்டு மூன்று இளம் பெண்கள் ஓலமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு வங்காளி பெண்மணியை அவர்கள் அழுவதின் காரணத்தைக் கேட்டேன். ‘தம்பி, அவர்கள் சிறு வயதில் திருமணம் செய்து கொண்டு விதவையானவர்கள். அவர்கள் விதவையான பிறகு பாடக்கூடாது, ஆடக்கூடாது, கோவிலைத் தவிற வேறு எங்கும் போகக்கூடாது என பல கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் அவர்கள் கோவிலுக்குப் போகவோ அழுவதற்கோ எந்தத் தடையும் இல்லை. ஆகவே அவர்கள் அதைச் செய்வதைத் தவிற தங்களுக்கு வேறு வழியில்லை என நம்புகிறார்கள். ஆனால் அது மிகப் பெரிய தவறு. நானே சிறு வயதில் விதவையானேன். ஆனால் தற்போது ஒரு ராணுவ ஆபீசரை மறுமணம் செய்து கொண்டேன். நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது என்று சொன்னார்.

இலங்கைத் தமிழர்கள் நிலையை கோவிலில் ஓலமிட்ட குழந்தை விதவைகளுக்கு ஒப்பிடலாம். அவர்கள் நிலை குலைந்து நிற்கிறார்ள். தொடர்ந்து அரசியல் மற்றும் ஆயுதவாதிகளின் பேச்சைக் கேட்டு பேரழிவு அடைந்த அவர்களுக்கு எவர் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை கிடையாது. தங்கள் மீதும் நம்பிக்கை இல்லை முப்பது ஆண்டுகளாக வன்முறைக் கலாச் சாரத்துக்கு உடன் பட்டு தலையாட்டி பொம்மைகளானவர்கள் அவர்களை உசுப்பிவிட தங்கள் கலாசாரம் அழிந்துவிட்டது என்று சிலர் ஓலமிடு- கிறார்ள். ஆனால் அதை ஒப்புக் கொள்ள அவர்கள் மனம் மறுக்கிறது; அதன் காரணம் தற்போது வாழ வழியில்லை என்பதே ஆகும்.

அவர்களுக்கு வேறு வழியில்லையா?   

எனக்கு சென்ற ஐம்பது ஆண்டுகளாக இலங்கையுடன் தொடர்பும் பரிச்சயமும் உண்டு. ஆகவே நான் என் இலையுதிர் காலத்தில் இலங்கைத் தமிழர்களைப் பார்க்கும் போது முன்பு தெளிவாகாத பல கூறுகள் ஓரளவு தெரிகின்றன.

முதலாவது, பெரும்பான்மை மக்களுக்கு அதிகமான நனமை அளிப்பவை எது என்று தமிழர்களே நிச்சயிக்க வேண்டும். அதை மற்றவர்கள் நிச்சயிக்கக் கூடாது. அத்தகைய நிலையை அடைவது எளிதல்ல.போர்க் -கலாசாரம் வளர்ந்து தழைத்து மக்களிடையே வன்முறைக்கு அடிபணியும் மன நிலை ஓங்கியுள்ளது. தமிழர்கள் துன்பங்களுக்கு போர்க் கலாசாரம் ஒரு முக்கிய காரணி. ஒரு ராணுவத்தான் இவ்வாறு கூறுவது உங்களுக்கு சிரிப்பைத் தரலாம் ஆனால் பல போர்களைச் சந்தித்த அனுபவத்திலிருந்து நான் கற்ற பாடம் இது. உலக ராணுவங்கள் அழிக்கப் பிறந்தவை. அவர் வெற்றியை கணிப்பவை அவர்கள் எவ்வளவு எதிரிகளைக் கொன்றார்கள் எவ்வளவு பொருட்களை நசிப்பித்தார்கள் என்பவற்றைப் பொறுத்தது.

அப்படி இருந்தும் வன்முறையை அடக்க மனித கலாசாரம் ராணுவங்களை உருவாக்கி, அவற்றுக்கு ஒரு உயர்ந்த இடத்தை சமூகத்தில் அளித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அந்த போர்க் கலாசாரம் இலங்கைத் தமிழர்களுக்கு தேவையற்றது. அதைத் தவிர்த்து வேறு சூட்சுமங்களை தமிழர்கள் யோசிக்க வேண்டும்.

இரண்டாவது, நான்கில் ஒரு ஈழத் தமிழர் தன் உடமைகளையும் உறவினரையும் பறிகொடுத்து நிற்கிறார்கள். அவர்கள் அடிப்படைத் தேவைகளுக்கு உலகெங்கும் நிதியும் பொருளும் சேகரித்து உதவ முயற்சி எடுக்க வேண்டும். இதைப் பெரும் அளவில் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. இதற்கு சமீபத்தில் கிரிக்கெட் வீரர் மஹிள ஜயவர்த்தன எடுத்த முயற்சி ஒரு எடுத்துக்காட்டு. ஏன் இத்தகைய முயற்சிகளைத் தமிழ் அரசியல் வாதிகள் (இலங்கையிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி) எடுக்கவில்லை என்பது எனக்கு புரியாத புதிர்.   

மூன்றாவது, தமிழர்களிடைய ஒரு கலாசாரச் சீறழிவு ஏற்பட்டுள்ளது. இது அன்னியர்களால் ஏற்பட்டதல்ல. அதற்கு அவர்கள் துதிபாடும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களே காரணமாகும். கட்சி வேறுபாடு இல்லாமல் பொதுவாக எல்லோருக்குமே இதில் பங்கு உண்டு. முக்கியமாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று பறைசாற்றிக் கொண்டவர்கள், தற்போது உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளார்கள். ஆகவெ அவர்கள் வார்த்தை ஜாலங்களில் மயங்காதீர்கள். அவர்கள் தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொண்டு சாதி வாத நெருப்பை மூட்டிக் குளிர் காய்பவர்கள். சாமியில்லை பூதமில்லை என்று கூறிக்கொண்டு தங்களுக்கே சிலை வைத்து பூசை போடச் சொல்லுபவர்கள். உங்கள் தேவைகள் அவர்கள் சுய தேவைகளுக்கு அப்பாற்பட்டவை. ஆகவே அவர்கள் உறுதி மொழிகளை நம்பி அவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்புக்களை அதிகமாக்காதீர்கள். இவ்வாறு பலமுறை நீங்கள் ஏமாந்திருக்கிறீர்கள். உங்கள் சொந்தத் திறமைகளை நம்புங்கள், வளருங்கள்.

கடைசியாக, இவையெல்லாம் சாத்தியமா என்று யோசிக்காதீர்கள். அவற்றை சாதிக்க என்ன வழி என்று ஆய்வு செய்யுங்கள். எனக்கு வரும் பெரும்பாலான இ-மெயில்கள் மற்றவர் – இந்தியா, தமிழ் நாடு, அமெரிக்கா, சீனா, மற்ற இனத்தவர், மற்ற சாதியினர்கள் – தமிழர்களுக்குச் செய்த குற்றங்களையே பேசுகின்றன. மற்ற எல்லோரையும் சீர்திருத்த ஒரு ஜன்மம் போதுமா? அதைவிடச் சுலபமானது நாம் நம்மிடம் உள்ள குறைகளைத் திருத்துவதே. இந்த தீர்க்கமான மன நிலை வர நீங்கள் மற்றவர்களைக் குறை சொல்லுவதை நிறுத்துங்கள். நீ மற்றவனை சுட்டிக் காட்டும் போது உன் மூன்று விரல்கள் உன்னையே சுட்டிக் காட்டுகின்றன என்ற ஒரு பழைய ஆங்கில பழமொழி நினைவுக்கு வருகிறது. உண்மைதான். முதலில் நீங்கள் உங்கள் குறைகளைக் கண்டறிந்தால். உங்கள் பிரச்சினைகளில் பாதி வலு இழந்துவிடும்.

இவற்றை நான் அதிகம் எடுத்துச் சொல்வதில்லை. ஓரிரு முறை சொன்ன போது, நீங்கள் ஆரியர், திராவிட நாகரீகத்தை அழித்தவர் என்று கேட்பவர்கள் சிலர் சாடியதுதான் மிச்சம். இன்னும் எவ்வளவு காலம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று மேற்கோள் காட்டிவிட்டு மற்ற சாதிக்காரர்களையும், நாட்டுக்காரர்களையும் சாடுவீர்கள்? இவை அனைத்தும் பயனற்ற வாதங்கள். நாம் யதார்த்த வாதிகளாக மாற வேண்டும். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் மக்களுக்கு உதவ வேண்டும் அதுவே முதல் வேலை. முதலில் அது முடியட்டும்.  

சுருங்கச் சொன்னால் நாம் குழந்தை விதவைகள் மனப்பான்மையிலிருந்து மீள வேண்டும். ஆக்கப் பூர்வமான செயல்களில் ஈடுபடவேண்டும்.

நன்றி; தூது,  15 ஆகஸ்டு, 2011 - இலங்கையில் புதிதாகப் பிரசுரமாகும் பத்திரிகை
 

வெள்ளி, 24 டிசம்பர், 2010

கடைசியாக, ஒரு தன்மானத் தமிழன்

தமிழ் நாட்டு அரசியல் அவலங்கள் எல்லோருக்கும் தெரிந்ததே. இருந்தாலும் கடைசியாக அந்த ‘இலவசத்தைக் கொடுத்து அரசயில் நடத்தும் கலாச்சாரத்தைத் தட்டிக்கேட்க கடைசியாக ஒரு தமிழனுக்காவது தன்னுணர்வு இருந்தது என்பதை நான் பின் வரும் செய்தி மூலம் உணர்ந்தேன். வளர்க விஜயகுமார்கள், அழிக இலவச லஞ்ச அரசியல் என்று வாழ்த்துகிறேன்.

தன்மானத் தமிழன் விவசாயி விஜயகுமார்


புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து
விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு
கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப்பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்துவிவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான
மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.

அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்.
முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும்,அன்பும் உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி
வைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.

“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் ஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.

இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவுஅடையச் செய்தாலே போதுமே.

கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.


அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519.அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை