வியாழன், 5 மே, 2011

ஒசாமாவின் மறைவும் இந்தியாவும்


கர்னல் ஆர் ஹரிஹரன்

அல்-கயிதா பயங்கரவாதத்தின் தந்தையாகக் கருதப்படும் ஒசாமா பின் லாடன் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள ஆபடாபாத் என்ற ஊரில் கடந்த 4-ந் தேதி அமெரிக்க உளவியல் துறையும் சிறப்புப் பிரிவுப் படையினரும் சேர்ந்து நடத்திய தாக்குதலில் கொல்லப் பட்டார். இது அமெரிக்கா 2001-ம் ஆண்டு இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துத் துவக்கிய உலகளாவிய போரின் ஒரு திருப்பு முனையாகும்.
ஒசாமாவின் அல்-கயிதா தற்கொலைப் படையினர் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 
11-ந் தேதி அமெரிக்காவில் பல இலக்குகளைத் தாக்கி 3000-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்த பின் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஒசாமாவையும் அல்-கயிதாவையும் அழிக்கும் ஒரே குறிக்கோளுடன் ஆப்கனிஸ்தானில் போர் தொடுத்தார். ஏறக்குறைய பத்தாண்டுகளாகத் தொடரும் அப்போருக்கு ஒசாமாவின் அழிவு ஒரு மகத்தான வெற்றி என்றே கூற வேண்டும்.

தற்போது தெற்காசியாவையும் இந்தியாவையும் பொறுத்தவரை ஒசாமாவின் மறைவு மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளது. தெற்காசியாவில் அல்-கயிதா தீவிரவாதிகளின் போர் திறன் ஒசாமா மறைவால் குறையுமா? நலிந்து வரும் பாகிஸ்தான்-அமெரிக்க உறவில் என்ன தாக்கம் ஏற்படக்கூடும்? ஒசாமாவின் மறைவால் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் பாதிக்கப் படுமா?

ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஒபாமா ஆப்கானிஸ்தானிலிருந்து யு.எஸ் ராணுவத்தின் வலிமையை படிப்படியாகக் குறைப்பதில் முனைந்துள்ளார். அந்த முயற்சியை ஒசாமாவின் மறைவு ஓரளவு ஊக்குவிக்கும் என்பது நிச்சயம். ஒசாமா ஆபடாபாத்தில் வெளி உலகத் தொடர்பின்றி வசித்து வந்தார் என்று தெரியவந்துள்ளது. இது அவர் தினசரி போர் முனை விளைவுகளில் தொடர்ந்து ஈடுபடவில்லை என்பதைக் காட்டுகிறது. அவரது உடல் நலக் குறைவு இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறினாலும் அவர் அமெரிக்க ஏவுகணைகளின் தாக்குதல்களில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே தலை மறைவாய் இருந்தார் என்பது என் கணிப்பு.

ஓசாமாவின் நேரடித் தலைமை இல்லாத போதும் அல்-கயிதா தீவிரவாதிகள் ஆப்கனிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வலிமையுடன் தொடர்ந்து இயங்கி வருவதற்கு முக்கிய காரணம் இளைய தலைமுறைத் தலைவர்களே ஆகும். ஒசாமாவின் மறைவின் தாக்கத்தை சமாளிக்கும் திறன் அவர்களுக்கு இருக்கலாம்; ஆகவே போரின் கடுமை குறையாமல் தொடரலாம். ஆனால் ஒசாமா உலக அளவில் பல்வேறு இஸ்லாமிய தீவரவாத இயக்கங்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். ஆகவே அவர் மறைவின் பின் இஸ்லாமிய தீவர வாத இயக்கம் உலக அளவில் சிதற வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

ஆப்கனிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேரும் நாள் நெருங்க அல்-கயிதாவுக்கு அரசியல் ரீதியில் முழு ஆதரவு அளிக்கும் சமய அடிப்படை இயக்கமான தாலிபான் மீண்டும் அரசைக் கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆகவே தாலிபான் இயக்கம் ஒசாமா மறைவால் அல்-காயிதா சிதறாமல் இருக்கு முழு முயற்சி எடுக்கும். இருந்தாலும் ஆப்கனிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் உள்ள தீவரவாத மற்றும் சமய அடிப்படை இயக்கங்கள் ஓரளவு குழம்பிய நிலையிலே இருக்கும் என்று தோன்றுகிறது. அப்படி இருந்தாலும் உடனடியாக ஓசாமாவின் மறைவைப் பழிவாங்கத் தீவரவாதத் தாக்குதல்கள் தொடுக்கப் படலாம் என்பதே அமெரிக்க, மற்றும் இந்தியாவின் கணிப்பாகும்.

கடந்த ஜனவரி மாதம் ரேமண்ட் டேவிஸ் என்ற அமெரிக்க உளவுத்துறை அதிகாரி கொலைக் குற்றங்களுக்காக பாகிஸ்தானில் கைது செய்யப் பட்டார். அவரை விடுதலை செய்ய அமெரிக்கா எடுத்த முயற்சிகளின் விளைவாக ஏற்கனவே அமெரிக்க-பாகிஸ்தான் உறவு விரசல் கண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னால் இரு நாடுகளின் உளவுப் பிரிவுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்த பாக் ராணுவ உளவுத்துறைக் கட்டமைப்பு(ISI) தலைவரான ஜெனரல் ஷூஜா பாஷா அமெரிக்க மத்திய உளவு அமைப்பான CIA –வின் தலைவரைச் சந்திக்க அமெரிக்கா சென்றார். ஆனால் அப்போது ஏற்பட்ட அடிப்படைக் கருத்து வேறுபாடுகளால் பேச்சு வார்த்தைகளைத் தொடராமல் பாஷா திடீரென்று நாடு திரும்பினார். அந்த நிகழ்ச்சி பாக்-அமெரிக்க உறவுகளின் அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டியது.

ஒசாமாவை எதிர்த்து அமெரிக்கா ஏற்கனவே இரண்டு முறை நடத்திய தாக்குதல்கள் தோல்வியில் முடிந்தன. அந்த இரண்டு முறையும் ஒசாமாவின் மறைவிடத்தைப் பற்றிய தகவலை அமெரிக்கர்கள் பாக் ராணுவத்துடன் பகிர்ந்து கொண்டனர். பிறகு அமெரிக்கர் பாக் ராணுவத்துடன் சேர்ந்து தோல்வியில் முடிந்த கூட்டுத் தாக்குதல்களை நடத்தினர். அமெரிக்க ஆய்வாளர் கணிப்பில் ஓசாமா இரண்டு தாக்குதல்களிலிருந்தும் தப்பியதற்கு முக்கிய காரணம் பாக் ராணுவம் அல்-கயிதாவுடன் வைத்திருந்த தொடர்பாகும். இம்- முறை ஒசாமா மறைந்திருந்த இட விவரம் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதமே அமெரிக்க உளவுத்துறைக்கு தெரியவந்தாலும் அந்த விவரத்தை அமெரிக்கா பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அமெரிக்காவின் மூன்றாவது தாக்குதல் வெற்றியடைந்ததற்கு இது ஒரு முக்கிய காரணமாய் இருக்கலாம்.

அல்-கயிதா மற்றும் லஷ்கர் ஏ-தய்யப்பா போன்ற தீவிர வாத இயக்கங்கள் பாக் ராணுவத்தின் செல்லப் பிள்ளைகள் என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்த அமைப்புகள் பாக் உளவுத்துறையுடன் வைத்துள்ள உறவு மும்பியில் 2008-ம் ஆண்டு நடந்த லஷ்கர் தாக்குதலின் விளைவாகத் தொடர்ந்த ஆய்வுகளில் தெளிவாகியுள்ளது. பாக் ராணுவத்தின் முக்கிய கேந்திரமான ஆபடாபாத்தில் பாக் ராணுவத்திற்குத் தெரியாமல் ஒசாமா மீது வெற்றிகரமாக அமெரிக்கர்கள் நடத்திய தாக்குதல் பாக் ராணுவத்திற்கு ஒரு மானப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இது பாக் ராணுவத்தில் ஊடுருவியுள்ள தீவிரவாத நேசர்களைக் கட்டாயம் எரிச்சல் மூட்டும் சம்பவம் என்றே கருதலாம். ஆகவே அமெரிக்கத் தாக்குதலின் பின் விளவைகளை எப்படி பாக் ராணுவம் எதிர் கொள்கிறது என்பதைப் பொருத்தே பாக்-அமெரிக்க உறவுகள் வரும் மாதங்களில் கணிக்கப்படும்.

பாகிஸ்தானின் வெளிநாட்டு உறவுகளை நிச்சயிப்பதில் ராணுவத்துக்கு முக்கிய பங்கு உண்டு. ஆகவே அமெரிக்கத் தலைமை எப்போதுமே பாக் ராணுவத்துடன் தனிப்பட்ட உறவை வளர்ப்பதில் கவனமாக உள்ளது. அந்த உறவை வளர்க்க அமெரிக்கா பெருமளவிலான ஆயுத தளவாடங்களையும் போர் விமானங்களையும் பாக் ராணுவத்திற்கு உதவியாக அளித்து வருகிறது. பாக் ராணுவம் எப்போதுமே இந்தியாவைத் தன் ஒரே எதிரியாகக் கருதி வருவதால் அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் அதற்குத் தேவைப் படுகின்றன. அதுபோல ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்க ராணுவம் வெற்றிகரமாக செயல் படவும், எதிர்காலத்திலும் அந்தப் பகுதியில் தனது செல்வாக்கை நீடிக்கவும் அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் ஒத்துழைப்பு தேவைப் படுகிறது. ஆகவே உட்பூசல்கள் இருந்தாலும் இரு நாடுகளும் தற்போதைய ஊடல் உறவை தொடர்ந்து நீடிப்பார்கள் என்று நினைக்கிறேன்

ஒசாமா மறைவினால் இந்தியாவை அச்சுருத்தும் பாக் தீவிரவாத இயக்கங்களில் அதிகம் பாதிப்பு ஏற்டாது. அவை பாக் ராணுவ, மற்றும் சில அரசியல் கட்சிகளின் துணையுடன் செயல் படுகின்றன. ஒசாமா ஆபடாபாதில் வசதியுடன் வாழ்ந்து வந்தது இந்தியா பாகிஸ்தானுடன் நடத்திவரும் பேச்சு வார்த்தைகளில் பாகிஸ்தானின் மீதான நம்பிக்கையைக் கட்டாயம் குலைக்கும். உலக அளவில் இந்தியா நெடுங்காலமாக பாகிஸ்தானே இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களின் தாயகமாகச் செயல்பட்டு வருகிறது என்று சொல்லி வருகிறது. அந்த வாதம் பாகிஸ்தானில் கண்டறியப்பட்ட ஒசாமாவின் புகலிடத்தால் ஓரளவு வலுப்பெற்றிருக்கிறது. இருந்தாலும் பாக் ராணுவ ஒப்புதல் இல்லாமல் இந்தியாவைப் பொருத்தவரை பாகிஸ்தான் அரசு எந்த புதிய முயற்சியும் மேற் கொள்ள முடியாது. அவற்றில் பாகிஸ்தானிலிருந்து இயங்கும் இந்திய எதிர்ப்புத் தீவிரவாத இயக்கங்களைக் கட்டுப் படுத்தும் முயற்சியும் அடங்கும். ஆகவே இந்தியா பாக் தீவிர வாதிகளின் தாக்குதலுக்குத் தொடர்ந்து தயாராகவே இருக்க வேண்டும். நமது உள்நாட்டு மந்திரி திரு சிதம்பரமும் இதையே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

1 கருத்து:

  1. Miga sirappana alasal. matra theeviravada iyakkangalukku enna badippu irukkum endru neengal kooriyadhu miga sari endru padugiradhu.
    Idhanal america-vin aid pakisthanukku kurayum endru nambugireergala?
    Usama-vai sniper attackil kondrargal endru therindha adutha 24 hours-il Indiavin special force JEM matrum LET targets-ai attack panni irukkalama?

    பதிலளிநீக்கு