வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

குழந்தை விதவைகள்



கேர்ணல் ஆர் ஹரிஹரன்

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் வங்காளத்தில் ராணுவப் பணியில் ஈடுபட்டிருந்தேன். நாங்கள் தங்கியருந்த இடம் கிராமப் புறத்தில் இருந்தது. ஒவ்வொரு மாலையும் சூரியன் மறையும் நேரத்தில் கோவில்  மணிகள் கேட்கும். ஆனால் அதற்கு முன்னால் கோவிலில் இருந்து பெண்கள் அழும் ஓலம் கேட்கும். ஒரு நாள் நான் அங்கு போய் பார்த்த போது, வெள்ளைச் சேலை கட்டிக் கொண்டு இரண்டு மூன்று இளம் பெண்கள் ஓலமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு வங்காளி பெண்மணியை அவர்கள் அழுவதின் காரணத்தைக் கேட்டேன். ‘தம்பி, அவர்கள் சிறு வயதில் திருமணம் செய்து கொண்டு விதவையானவர்கள். அவர்கள் விதவையான பிறகு பாடக்கூடாது, ஆடக்கூடாது, கோவிலைத் தவிற வேறு எங்கும் போகக்கூடாது என பல கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் அவர்கள் கோவிலுக்குப் போகவோ அழுவதற்கோ எந்தத் தடையும் இல்லை. ஆகவே அவர்கள் அதைச் செய்வதைத் தவிற தங்களுக்கு வேறு வழியில்லை என நம்புகிறார்கள். ஆனால் அது மிகப் பெரிய தவறு. நானே சிறு வயதில் விதவையானேன். ஆனால் தற்போது ஒரு ராணுவ ஆபீசரை மறுமணம் செய்து கொண்டேன். நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது என்று சொன்னார்.

இலங்கைத் தமிழர்கள் நிலையை கோவிலில் ஓலமிட்ட குழந்தை விதவைகளுக்கு ஒப்பிடலாம். அவர்கள் நிலை குலைந்து நிற்கிறார்ள். தொடர்ந்து அரசியல் மற்றும் ஆயுதவாதிகளின் பேச்சைக் கேட்டு பேரழிவு அடைந்த அவர்களுக்கு எவர் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை கிடையாது. தங்கள் மீதும் நம்பிக்கை இல்லை முப்பது ஆண்டுகளாக வன்முறைக் கலாச் சாரத்துக்கு உடன் பட்டு தலையாட்டி பொம்மைகளானவர்கள் அவர்களை உசுப்பிவிட தங்கள் கலாசாரம் அழிந்துவிட்டது என்று சிலர் ஓலமிடு- கிறார்ள். ஆனால் அதை ஒப்புக் கொள்ள அவர்கள் மனம் மறுக்கிறது; அதன் காரணம் தற்போது வாழ வழியில்லை என்பதே ஆகும்.

அவர்களுக்கு வேறு வழியில்லையா?   

எனக்கு சென்ற ஐம்பது ஆண்டுகளாக இலங்கையுடன் தொடர்பும் பரிச்சயமும் உண்டு. ஆகவே நான் என் இலையுதிர் காலத்தில் இலங்கைத் தமிழர்களைப் பார்க்கும் போது முன்பு தெளிவாகாத பல கூறுகள் ஓரளவு தெரிகின்றன.

முதலாவது, பெரும்பான்மை மக்களுக்கு அதிகமான நனமை அளிப்பவை எது என்று தமிழர்களே நிச்சயிக்க வேண்டும். அதை மற்றவர்கள் நிச்சயிக்கக் கூடாது. அத்தகைய நிலையை அடைவது எளிதல்ல.போர்க் -கலாசாரம் வளர்ந்து தழைத்து மக்களிடையே வன்முறைக்கு அடிபணியும் மன நிலை ஓங்கியுள்ளது. தமிழர்கள் துன்பங்களுக்கு போர்க் கலாசாரம் ஒரு முக்கிய காரணி. ஒரு ராணுவத்தான் இவ்வாறு கூறுவது உங்களுக்கு சிரிப்பைத் தரலாம் ஆனால் பல போர்களைச் சந்தித்த அனுபவத்திலிருந்து நான் கற்ற பாடம் இது. உலக ராணுவங்கள் அழிக்கப் பிறந்தவை. அவர் வெற்றியை கணிப்பவை அவர்கள் எவ்வளவு எதிரிகளைக் கொன்றார்கள் எவ்வளவு பொருட்களை நசிப்பித்தார்கள் என்பவற்றைப் பொறுத்தது.

அப்படி இருந்தும் வன்முறையை அடக்க மனித கலாசாரம் ராணுவங்களை உருவாக்கி, அவற்றுக்கு ஒரு உயர்ந்த இடத்தை சமூகத்தில் அளித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அந்த போர்க் கலாசாரம் இலங்கைத் தமிழர்களுக்கு தேவையற்றது. அதைத் தவிர்த்து வேறு சூட்சுமங்களை தமிழர்கள் யோசிக்க வேண்டும்.

இரண்டாவது, நான்கில் ஒரு ஈழத் தமிழர் தன் உடமைகளையும் உறவினரையும் பறிகொடுத்து நிற்கிறார்கள். அவர்கள் அடிப்படைத் தேவைகளுக்கு உலகெங்கும் நிதியும் பொருளும் சேகரித்து உதவ முயற்சி எடுக்க வேண்டும். இதைப் பெரும் அளவில் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. இதற்கு சமீபத்தில் கிரிக்கெட் வீரர் மஹிள ஜயவர்த்தன எடுத்த முயற்சி ஒரு எடுத்துக்காட்டு. ஏன் இத்தகைய முயற்சிகளைத் தமிழ் அரசியல் வாதிகள் (இலங்கையிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி) எடுக்கவில்லை என்பது எனக்கு புரியாத புதிர்.   

மூன்றாவது, தமிழர்களிடைய ஒரு கலாசாரச் சீறழிவு ஏற்பட்டுள்ளது. இது அன்னியர்களால் ஏற்பட்டதல்ல. அதற்கு அவர்கள் துதிபாடும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களே காரணமாகும். கட்சி வேறுபாடு இல்லாமல் பொதுவாக எல்லோருக்குமே இதில் பங்கு உண்டு. முக்கியமாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று பறைசாற்றிக் கொண்டவர்கள், தற்போது உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளார்கள். ஆகவெ அவர்கள் வார்த்தை ஜாலங்களில் மயங்காதீர்கள். அவர்கள் தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொண்டு சாதி வாத நெருப்பை மூட்டிக் குளிர் காய்பவர்கள். சாமியில்லை பூதமில்லை என்று கூறிக்கொண்டு தங்களுக்கே சிலை வைத்து பூசை போடச் சொல்லுபவர்கள். உங்கள் தேவைகள் அவர்கள் சுய தேவைகளுக்கு அப்பாற்பட்டவை. ஆகவே அவர்கள் உறுதி மொழிகளை நம்பி அவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்புக்களை அதிகமாக்காதீர்கள். இவ்வாறு பலமுறை நீங்கள் ஏமாந்திருக்கிறீர்கள். உங்கள் சொந்தத் திறமைகளை நம்புங்கள், வளருங்கள்.

கடைசியாக, இவையெல்லாம் சாத்தியமா என்று யோசிக்காதீர்கள். அவற்றை சாதிக்க என்ன வழி என்று ஆய்வு செய்யுங்கள். எனக்கு வரும் பெரும்பாலான இ-மெயில்கள் மற்றவர் – இந்தியா, தமிழ் நாடு, அமெரிக்கா, சீனா, மற்ற இனத்தவர், மற்ற சாதியினர்கள் – தமிழர்களுக்குச் செய்த குற்றங்களையே பேசுகின்றன. மற்ற எல்லோரையும் சீர்திருத்த ஒரு ஜன்மம் போதுமா? அதைவிடச் சுலபமானது நாம் நம்மிடம் உள்ள குறைகளைத் திருத்துவதே. இந்த தீர்க்கமான மன நிலை வர நீங்கள் மற்றவர்களைக் குறை சொல்லுவதை நிறுத்துங்கள். நீ மற்றவனை சுட்டிக் காட்டும் போது உன் மூன்று விரல்கள் உன்னையே சுட்டிக் காட்டுகின்றன என்ற ஒரு பழைய ஆங்கில பழமொழி நினைவுக்கு வருகிறது. உண்மைதான். முதலில் நீங்கள் உங்கள் குறைகளைக் கண்டறிந்தால். உங்கள் பிரச்சினைகளில் பாதி வலு இழந்துவிடும்.

இவற்றை நான் அதிகம் எடுத்துச் சொல்வதில்லை. ஓரிரு முறை சொன்ன போது, நீங்கள் ஆரியர், திராவிட நாகரீகத்தை அழித்தவர் என்று கேட்பவர்கள் சிலர் சாடியதுதான் மிச்சம். இன்னும் எவ்வளவு காலம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று மேற்கோள் காட்டிவிட்டு மற்ற சாதிக்காரர்களையும், நாட்டுக்காரர்களையும் சாடுவீர்கள்? இவை அனைத்தும் பயனற்ற வாதங்கள். நாம் யதார்த்த வாதிகளாக மாற வேண்டும். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் மக்களுக்கு உதவ வேண்டும் அதுவே முதல் வேலை. முதலில் அது முடியட்டும்.  

சுருங்கச் சொன்னால் நாம் குழந்தை விதவைகள் மனப்பான்மையிலிருந்து மீள வேண்டும். ஆக்கப் பூர்வமான செயல்களில் ஈடுபடவேண்டும்.

நன்றி; தூது,  15 ஆகஸ்டு, 2011 - இலங்கையில் புதிதாகப் பிரசுரமாகும் பத்திரிகை
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக